"நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்"...சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
Author
bala
Date Published

லக்னோ :உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 வழங்கப்படும் என்று கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். லக்னோவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ‘ஸ்த்ரீ சம்மான் சம்ருத்தி யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், எளிய மக்களுக்கு உயர்தர மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். அகிலேஷ், தற்போதைய பாஜக அரசை விமர்சித்து, “இந்த அரசு மோசமான தரத்தில் மடிக்கணினிகளை வழங்குகிறது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பான 1090 தொலைபேசி சேவையும் பல தடைகளால் பயனற்றதாக உள்ளது,” என்று குற்றம்சாட்டினார்.
சமாஜ்வாதி ஆட்சியில் இத்தகைய குறைகள் சரி செய்யப்பட்டு, மக்களுக்கு உண்மையான நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று அவர் கூறினார். இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் (2012-2017) அறிமுகப்படுத்தப்பட்ட சமாஜ்வாதி பென்ஷன் திட்டத்தை அகிலேஷ் நினைவுகூர்ந்தார். “அந்தத் திட்டத்தை பாஜகவும் மற்ற கட்சிகளும் பின்பற்றி ஆட்சிக்கு வந்தனர். இப்போது நாங்கள் மீண்டும் பெண்களுக்கு பொருளாதார உதவி வழங்குவோம்,” என்று அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி உத்தரப் பிரதேசத்தில் 43 இடங்களை வென்ற பின்னணியில், 2027 தேர்தலை நோக்கிய அகிலேஷின் மக்கள் நல உறுதிமொழியாக அமைந்துள்ளது. 2027 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக சமாஜ்வாதி கட்சி போட்டியிடும் என்று உறுதியளித்த அகிலேஷ், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.