Payload Logo
தமிழ்நாடு

தமிழை உயர்த்தி பேசினால் கமலுக்கு ஆதரவு தருகிறேன் - நயினார் நாகேந்திரன் பேச்சு!

Author

bala

Date Published

kamal haasan Nainar Nagendran

புதுக்கோட்டை :கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்குமாறு கர்நாடகாவில் கண்டன குரல் எழுந்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை சுமூகமாக வெளியிட அனுமதிக்குமாறுதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் (TFAPA) கர்நாடக திரைப்பட வர்த்தக மன்றத்திற்கு (KFCC) எழுதிய கடிதத்தின் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, கமல்ஹாசன் பேசிய விவகாரம் ஹாட் டெரெண்டிங் டாப்பிக்காக மாறியிருக்கும் சூழலில் இது குறித்து ஒரு பக்கம் ஆதரவும், மற்றொருபக்கம் அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார். இது குறித்து பேசிய அவர் " ஒரு மொழியை மற்றொரு மொழியுடன் ஒப்பிடுவதை ஏற்க முடியாது. கமல்ஹாசனோ அவரது கட்சியோ பாஜக ஆதரவு பெறவில்லை என்றாலும், தமிழ் மொழிக்கு எப்போதும் ஆதரவு உண்டு.

கமல்ஹாசன் இந்த நேரத்தில் தமிழை மட்டும் உயர்த்தி பேசியிருந்தார் என்றால் நிச்சயமாக அவருக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுத்திருக்கும். ஆனால், அடுத்தமொழியோடு தமிழை சம்பந்த படுத்தி பேசுவது என்பது சரியாக இருக்காது. எனவே, தமிழை உயர்த்தி பேசினால் கமல்ஹாசனுக்கு மட்டும் இல்லை முதல்வருக்கு கூட நான் ஆதரவு கொடுப்பேன்" எனவும் பேசினார்.

அதனைத்தொடர்ந்து அமித் ஷா சமஸ்கிருதத்திலிருந்து இந்திய மொழிகள் தோன்றியதாகக் கூறியது குறித்த கேள்விக்கு, இந்தியா பல மொழிகள், பல்வேறு மக்கள் வாழும் நாடு என்பதால், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழி தோன்றியது என்ற கருத்தை ஏற்க முடியாது என்று பதிலளித்தார். தனிப்பட்ட முறையில் அதிரடி அரசியலை விரும்பவில்லை என்று கூறிய நயினார், உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8-ம் தேதி மதுரைக்கு வருகை தரவுள்ளதாகவும், அவர் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் நயினார் தெரிவித்தார்.