அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!
Author
bala
Date Published

அகமதாபாத் :ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து, டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். லண்டனுக்கு செல்லவிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் பி.ஜே. மெடிக்கல் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் 241 பயணிகள் உட்பட 279 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து டாடா குழும தலைவர் சந்திரசேகரன், “விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன், விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். ‘கடவுளே, என்ன இது?’ என்று தோன்றியது. அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது,” என்று உருக்கமாக தெரிவித்தார்.
இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி மற்றும் துயரத்தை அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவோம்,” என்று கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா சார்பில் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவுகளை முழுமையாக ஏற்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசுகையில் " இதயத்தை நொறுக்கும் விஷயம் இது. விமான விபத்தில் இழப்பை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. நாம் என்ன சொன்னாலும் அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். குடும்பங்களை இழந்தவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் துணை நிற்பேன். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த வகையில் வேண்டுமானாலும்,உதவி செய்வேன்" எனவும் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
விபத்து குறித்து இந்திய விமான விபத்து விசாரணை ஆணையம் (AAIB), அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB), மற்றும் போயிங் நிறுவனத்துடன் இணைந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டு, விபத்துக்கு பறவை மோதல், இறக்கை ஃபிளாப் செயலிழப்பு, அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று ஆராயப்பட்டு வருகிறது. “விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை காத்திருக்கிறோம். எங்கள் முழு ஒத்துழைப்பையும் விசாரணைக்கு வழங்குவோம்,” என்று சந்திரசேகரன் உறுதியளித்தார்.