போதைப்பொருள் வழக்கு: 'நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்' - உயர் நீதிமன்றம்.!
Author
gowtham
Date Published

சென்னை :போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இவர்கள் கடந்த ஜூன் 23 மற்றும் 26 ஆம் தேதிகளில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கொகைன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்றத்தில் இவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி, இன்று (ஜூலை 8) நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனுக்கள் மீது, காவல்துறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. நிபந்தனைகளில் ஒரு பகுதியாக, இருவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், தவறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் மற்றவர்களை விசாரிக்க வேண்டியிருப்பதால், காவல்துறை தரப்பில் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.