பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 3 பேர் உயிரிழப்பு.!
Author
gowtham
Date Published

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடகரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடகரையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டமானது. வேதிப்பொருள் கலவையில் உராய்வு ஏற்பட்டதால் வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பயங்கர ஒலியுடன் வெடிப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விபத்தை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.