Payload Logo
உலகம்

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

Author

bala

Date Published

israel benjamin netanyahu

தெஹ்ரான் :இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இந்த தாக்குதல்களுக்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக ஈரானின் அரசு ஊடகமான தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் அரசு தொலைக்காட்சி, இஸ்ரேலின் தெல் அவிவ் நகரில் அமைந்துள்ள பென் குரியன் விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் விமான நிலையத்தின் செயல்பாடுகளை பாதித்ததாகவும், இஸ்ரேலின் பல இராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகளை தாக்கியதாகவும் அறிவித்தது.

IRGC-யின் அறிக்கையின்படி, இந்தத் தாக்குதல்கள் “இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடி” மற்றும் “பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக” மேற்கொள்ளப்பட்டவை எனக் கூறப்பட்டுள்ளது. தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள், இஸ்ரேலின் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவும் திறன் கொண்டவை என்று ஈரான் உரிமை கோரியுள்ளது.

இஸ்ரேல் தரப்பில், இந்தத் தாக்குதல்கள் குறித்து உடனடி கருத்து வெளியிடப்படவில்லை, ஆனால் இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) ஏவுகணைகளை இடைமறிக்க முயற்சித்ததாகவும், சில இலக்குகளில் தாக்குதல்கள் ஏற்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. பென் குரியன் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக வான்வெளி மூடப்பட்டதாகவும் இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்தத் தாக்குதல்கள், மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. ஈரானின் கூட்டாளிகளான ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், “போரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டோம்,” என்று அறிவித்து, அமெரிக்க கடற்படைக் கப்பல்களை குறிவைக்க எச்சரித்துள்ளனர். எனவே, என்ன நடக்கப்போகிறது என்கிற பதற்றமான கேள்விகளும் எழுந்துள்ளது.