Payload Logo
சினிமா

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

Author

bala

Date Published

srikanth and krishna

சென்னை :போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, முன்னாள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் மற்றும் போதைப் பொருள் சப்ளையர் கெவின் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தொடரப்பட்டது. கடந்த ஜூன் 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்ட இவர்கள், எழும்பூர் நீதிமன்ற உத்தரவின்படி ஜூலை 10, 2025 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடிகர் கிருஷ்ணா தனது மனுவில், தன்னிடம் எந்தப் போதைப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும், மருத்துவப் பரிசோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்றும் வாதிட்டார். மேலும், இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டதாகவும், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும் கூறினார். ஸ்ரீகாந்த் தரப்பில், தனது குழந்தையின் உடல்நலக் காரணங்களைக் குறிப்பிட்டு ஜாமீன் கோரப்பட்டது. ஆனால், அவரது முதல் மனு எழும்பூர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. காவல்துறை விசாரணையில், ஸ்ரீகாந்த் 2023 முதல் 40 முறை, 4.72 லட்சம் ரூபாய் மதிப்பில் கொக்கைன் வாங்கியதாகவும், கிருஷ்ணா வாட்ஸ்ஆப் குழு மூலம் போதைப் பொருள் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 2, 2025 அன்று நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மருத்துவ அறிக்கைகள் மற்றும் காவல்துறை ஆதாரங்களை ஆய்வு செய்ய கூடுதல் நேரம் தேவைப்படுவதாகக் கூறி, தீர்ப்பை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தது. இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.