Payload Logo
கிரிக்கெட்

பெங்களூர் சம்பவத்தை வச்சு அரசியல் செய்ய வேண்டாம் - ராஜீவ் சுக்லா

Author

bala

Date Published

rcb fans celebration death

பெங்களூர் :சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில், எதிர்பாராத கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 ஆண்டு நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டதால் இந்த பேரிழப்பு ஏற்பட்டது.

கோப்பை வென்ற கொண்டாட்டத்தில் பலரும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இப்படியான ஒரு சம்பவம் நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பொறுப்பற்ற அரசியல் கருத்துகளைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “பெங்களூரு கூட்ட நெரிசலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என்று கூறினார். இந்த அறிக்கையை அவர் டெல்லியில் இருந்து வெளியிட்டார். மேலும் இந்த சம்பவத்தை அரசியலாக்குவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தும் என எச்சரித்தார். அது மட்டுமின்றி,  “பெங்களூரு கூட்ட நெரிசல் போன்று எந்த மாநிலத்திலும் நடக்கலாம், அதற்காக மாநில அரசுகளை நாம் குற்றம் சுமத்த முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோல நடந்தாலும் நாம் அதை அரசியல் செய்யக் கூடாது” என்று கூறினார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என ஆர்சிபி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. இந்த துயர சம்பவம் திடீரென நடைபெற்றது.” ஆர்சிபி அணியின் 18 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு முதல் ஐபிஎல் கோப்பை வென்றதால், லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதை நிர்வாகம் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.