மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்.!
Author
gowtham
Date Published

சென்னை :தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை. தற்போதைய சட்டமன்ற பலத்தின்படி, திமுக கூட்டணிக்கு 159 எம்எல்ஏக்கள் உள்ளனர், இதன் மூலம் அவர்களுக்கு 4 இடங்கள் உறுதியாகக் கிடைக்கும்.
அதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த மே 28 அன்று மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார். திமுக சார்பில் நான்கு இடங்களுக்கு மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர், மேலும் ஒரு இடம் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க மாநிலங்களவை வேட்பாளர்கள் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டமன்றப் பேரவைச் செயலக கூடுதல் செயலாளர் சீனிவாசனிடம் சமர்ப்பிக்கப்பட்டன. வேட்புமனு பரிசீலனை ஜூன் 10 அன்று நடைபெறும், அந்த வேட்புமனுவை திரும்பப் பெற ஜூன் 12 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் ஜூன் 19 அன்று நடைபெற்று, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும்.