கடலூர் ரயில் விபத்து: செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்.!
Author
gowtham
Date Published

கடலூர் :செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றைய தினம் ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில், ஒரு தனியார் பள்ளி வேன் மீது மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், சில மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். விபத்து நடந்த பகுதியில் கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விபத்து நடந்தபோது, ரயில்வே கேட் திறந்த நிலையில் இருந்ததாகவும், ரயில் வருவதற்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் இல்லாததால் வேன் ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தை அடுத்து, கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா மீது சிதம்பரம் ரயில்வே காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர் அலட்சியமாக செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக, மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாட்டில் நியமித்தது சர்ச்சையான நிலையில் தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.