Payload Logo
தமிழ்நாடு

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்.!

Author

gowtham

Date Published

Cuddalore Train Accident

கடலூர் :கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:40 மணியளவில், கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் (நிமலேஷ், சாருமதி, செழியன்) உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் சங்கர் மற்றும் மாணவர் விஸ்வேஸ் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தபோது ரயில்வே கேட் மூடப்படாததால், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியம் காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து விசாரிக்க, ரயில்வே துறையால் மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பங்கஜ் சர்மா, வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு படை (RPF) சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணையில், கேட் கீப்பர் கேட்டை மூடுவதற்கான தகவலை முறையாகப் பெறவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இது 'நான்-இன்டர்லாக்கிங்' கேட் ஆகும், இதில் தொலைபேசி மூலம் தான் தகவல் பரிமாறப்படுகிறது. இந்நிலையில், பயணிகள் ரயில் கடக்கும் முன் தொலைபேசியில் அழைப்பு வந்தும் பங்கஜ் சர்மா பதிலளிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. ரயில் வருவதை முன் எச்சரிக்கை செய்ய அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா உறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது, மேலும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்