Payload Logo
தமிழ்நாடு

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

Author

bala

Date Published

cuddalore

கடலூர் :மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையிலே இந்த செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை (45) என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால், மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்று வெளியான தகவல் மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டை சோகம், உள்ளூர் மக்களிடையே பெரும் துயரத்தையும், பாதுகாப்பு குறித்த கவலையையும் எழுப்பியுள்ளது. விபத்து நடந்தபோது, பள்ளி வேன் ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வேன் முற்றிலும் நொறுங்கியதாகவும், பயணித்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்கள் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம், விபத்தின் தாக்கத்தால் அருகில் இருந்த மின்கம்பி அறுந்து, அண்ணாதுரை மீது விழுந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர், இதனால் அவர் உயிரிழந்தார்.இந்த விபத்து, ஆளில்லா ரயில்வே கேட் பகுதிகளில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. வேன் ஓட்டுநர், ரயில் வருவதை கவனிக்காமல் அவசரமாக கேட்டைக் கடக்க முயற்சித்ததாகவும், இதனால் விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மின்கம்பி அறுந்து விழுந்ததற்கு மின்சார வாரியத்தின் பராமரிப்பு குறைபாடு காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையும், ரயில்வே துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன. விரைவில் சம்பவம் எப்படி நடந்தது இந்த துயர சம்பவம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி விவரங்கள் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.