Payload Logo
தமிழ்நாடு

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் - எடப்பாடி பழனிசாமி சாடல்!

Author

bala

Date Published

mk stalin eps

கோயம்புத்தூர்:அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7, 2025 அன்று தனது மாநில அளவிலான பிரச்சாரத்தை “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தொடங்கினார். வன பத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர், விவசாயிகள், நெசவாளர்கள், மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “இந்தக் கூட்டத்தைப் பார்த்து ஸ்டாலினுக்கு ஜுரம் வந்திருக்கும். நாளை அவர் மருத்துவரைச் சந்திக்க வேண்டிய நிலை வரலாம். இந்த தீயசக்தி திமுக ஆட்சியை வீழ்த்தி, நல்லாட்சியை நாம் கொண்டுவருவோம். தமிழ்நாட்டு மக்களை இனி ஏமாற்ற முடியாது,” என்று அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நோக்கி, “1999-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தீர்களா? இல்லையா? தமிழ்நாட்டு மக்களை இனியும் ஏமாற்ற முடியாது, ஸ்டாலின் அவர்களே,” என்று கேள்வி எழுப்பினார். திமுகவின் முந்தைய கூட்டணி முடிவுகளை சுட்டிக்காட்டி, அவர்களின் தற்போதைய நிலைப்பாட்டை விமர்சித்தார். மேலும், திமுக அரசு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தோல்வியடைந்து, மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். “இந்தப் பயணம், திமுக அரசின் குறைகளையும், தோல்விகளையும் பிரதிபலிக்கும். 2026-ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து, தமிழகத்தை மீட்கும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். விவசாயிகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி பேசிய எடப்பாடி, அவினாசி-அத்திகடவு திட்டத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். “முன்பு மத்திய அரசுக்கு அனுப்பிய இந்தத் திட்டம் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு நீர் வழங்குவதற்காக சிறப்புக் குழு அமைத்து, மாற்றுத் திட்டமாக இதை செயல்படுத்தினோம். ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம், திமுக ஆட்சியில் கைவிடப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் மனம் குளிரும் வகையில் இதை விரிவாக செயல்படுத்துவோம்,” என்று உறுதியளித்தார். மேலும், பவானி அணை நிரம்பிய பின்னரே தண்ணீர் எடுக்க முடியும் என்ற பழைய திட்டத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அதிமுகவின் மாற்று திட்டம் விவசாயிகளுக்கு உடனடி நன்மை பயந்ததாக கூறினார். மேலும், இந்த பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, கோயம்புத்தூரில் இருந்து தொடங்கி, எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய 21 மாவட்ட அலகுகளில் 30-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பங்கேற்பார். “இந்த பயணம், திமுக ஆட்சியை அகற்றுவதற்கான மாபெரும் மாற்றத்தை கொண்டுவரும். 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்து வரலாறு படைக்கும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.