மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
Author
gowtham
Date Published

சேலம் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 12, 2025) சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத்தில் (ஜூன்12) பாசனத்துக்காக திறக்கப்படுவது இது 20-வது முறையாகும்.
முதல் கட்டமாக விநாடிக்கு 3,000 கனஅடி நீரை திறந்து வைத்த முதல்வர் மலர் தூவி வரவேற்றார். அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு பின்னர் படிப்படியாக விநாடிக்கு 12,000 கனஅடியாக உயர்த்தப்படவுள்ளது. இதனால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 17.15 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அணையின் நீர்மட்டம் 114 அடிக்கு மேல் இருப்பதால், குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையை இன்று திறந்து வைத்த பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.1,500 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.