Payload Logo
தமிழ்நாடு

''ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” - மு.க.ஸ்டாலின்.!

Author

gowtham

Date Published

CMMKStalin

திருப்பத்தூர் :திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,''அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் மதநல்லிணக்கத்தோடு வாழும் தமிழ்நாட்டில் மதத்தை பயன்படுத்தி எதுவுமே செய்யமுடியவில்லையே என்று கதறுகிறது மதவாத கூட்டம். தமிழ்நாடு பெரியார், அண்ணா, கலைஞரின் மண். இங்கு மத அரசியல் எடுபடாது'' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ''பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்று உள்ளது. ஒரு வீடு கட்ட ரூ.1.20 லட்சம் தராங்க. இந்த காசுல வீடு கட்ட முடியுமா? அதுலயும் ரூ.72,000 மட்டும்தான் மத்திய அரசு தருது. மீதி கூடுதலாக ரூ.1.62 லட்சம் மாநில அரசு கொடுத்து வீடு கட்டித் தருகிறோம். பெயர்தான் அவங்களோடது, நிதி நம்முடையது. அதனால தான் ஏற்கனவே நான் ஒரு டயலாக் சொன்னேன். ''மாப்பிள்ளை அவருதான், ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது'' என விமர்சனம் செய்தார்.

மேலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம், செயல்படுத்தி வருகிறோம், தொடர்ந்து செய்வோம். அதனால்தான், மக்கள் அன்பை வாரிவழங்கி வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாத கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிந்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை, நம் திராவிட மாடல் அரசு கடந்த 4 ஆண்டுகளில் மீட்டெடுத்து, வரலாறு காணாத வளர்ச்சிக்கு கொண்டு சென்று இருக்கிறது. இதனை, தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசால் கூட மறைக்க முடியவில்லை. பொருளாதார வளர்ச்சியில் 9.69% உடன் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது'' என்று கூறினார்.