Payload Logo
இந்தியா

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

Author

bala

Date Published

ahmedabad plane crash

அகமதாபாத் :கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் AI-171 விமானம் சில வினாடிகளில் விபத்துக்குள்ளானது. 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் மேகனி நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது மோதி வெடித்தது. இந்த விபத்தில் 241 பயணிகள் மற்றும் 33 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர்.

இன்னும் இந்த விபத்து சம்பவம் என்பது தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்திய விமான  விசாரணை ஆணையம் (AAIB) இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  ஜூன் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளையும் (ஃப்ளைட் டேட்டா ரெகார்டர் மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர்) மீட்டது. இந்தக் கருப்புப் பெட்டிகள், விபத்துக்கான காரணத்தை அறிய முக்கியமான தரவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கருப்புப் பெட்டிகள், விமானத்தின் இயக்கம், உயரம், வேகம், இயந்திர செயல்பாடு மற்றும் காக்பிட் உரையாடல்களைப் பதிவு செய்யும் முக்கியமான கருவிகளாகும். ஜூன் 24, 2025 அன்று, முன்புற கருப்புப் பெட்டியில் இருந்து கிராஷ் பாதுகாப்பு மாட்யூல் (CPM) பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஜூன் 25 அன்று மெமரி மாட்யூல் வெற்றிகரமாக அணுகப்பட்டது. இந்தத் தரவுகள், AAIB-யின் டெல்லியில் உள்ள புதிய டிஜிட்டல் ஃப்ளைட் டேட்டா ரெகார்டர் மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் ஆய்வகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டன.

இந்த ஆய்வகம், 9 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டு, ஏப்ரல் 2025-ல் திறக்கப்பட்டது. இந்தியாவிலேயே இந்தத் தரவுகளை பகுப்பாய்வு செய்ய முடியும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார், கருப்புப் பெட்டிகளில் ஒரு பெட்டி வெளிப்புற சேதத்தை எதிர்கொண்டிருந்தாலும், உள் மெமரி மாட்யூல்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவின் புதிய ஆய்வகத்தில் தரவு மீட்பு முயற்சிகள் தொடங்கியுள்ளன, ஆனால் சேதத்தின் தீவிரம் காரணமாக, முழுமையான பகுப்பாய்வுக்கு சில வாரங்கள் ஆகலாம். இருப்பினும் விரைவில் அதனை வைத்து விசாரணை செய்தால் விரைவாகவே விபத்துக்கான காரணம் தெரியவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.