பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Author
bala
Date Published

சென்னை :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட சுற்றுப்பயணத்திற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஜூலை 10 அன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்தப் பயணத்தை “தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்று கூறும் கூட்டத்துடன் இப்போது அதிமுகவையும் சேர்த்துவிட்டார்” என்று கிண்டலாக விமர்சித்தார். இது குறித்து மு.க. ஸ்டாலின் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். ஆனால், ‘தமிழ்நாடு’ என்று சொல்லக் கூடாது என்று சொல்லும் கூட்டத்துடன் இப்போது அதிமுகவையும் சேர்த்துவிட்டார். அதிமுகவை மீட்க முடியாத இவர், தமிழகத்தை மீட்கப் போகிறாராம்” என்று கூறி, கட்சியின் தற்போதைய நிலையையும் விமர்சித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் “திருவாளர் பழனிசாமி அவர்களே, உங்களிடமிருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டது” என்று கூறி, திமுக ஆட்சியில் தமிழ்நாடு மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் பேசினார். அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் “அதிமுகவை மீட்க முடியாத எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டை மீட்போம் என்று பயணம் செய்கிறார். அவரிடமிருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டது. செய்த குற்றங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, அவர் தமிழ்நாட்டை பாஜகவிடம் அடகு வைத்தார்,” என்று குற்றம் சாட்டினார். மேலும், “பாஜகவின் டப்பிங் வாய்சில் பேசிக்கொண்டிருந்த பழனிசாமி, தற்போது ஒரிஜினல் வாய்சில் பேசுகிறார்" எனவும் விமர்சனம் செய்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் “66 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்து வந்த திமுக, தற்போது மக்களின் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், அதிமுகவின் ஆட்சியில் மக்கள் பல துயரங்களை அனுபவித்தனர். இப்போது மக்களைக் காப்போம் என்று கூறுவது வெறும் நாடகம்" எனவும் தெரிவித்தார்.