Payload Logo
தமிழ்நாடு

"என் மூச்சு உள்ளவரை நானே பாமக தலைவர்'' - பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி.!

Author

gowtham

Date Published

anbumani - PMK founder Ramadoss

விழுப்புரம் :அன்புமணிக்கு தலைவர் பதவியை வழங்க மாட்டேன் என ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நடைப்பிணமாக்கிவிட்டு, நடைபயணம் போகிறார்கள் என அன்புமணியை நேற்றைய தினம் ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேலும், கட்சியை விட்டு அன்புமணியை நீக்க மாட்டேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், மூச்சு இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை தர மாட்டேன் என இன்று அறிவித்துள்ளார். இதனால், மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், தைலாபுரம் இல்லத்தில் இன்று செய்தியாளர் சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ''என் உத்தரவின்படி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் மகிழ்ச்சி. 2026 தேர்தலுக்குப் பிறகு அன்புமணிக்குத் தலைவர் பதவியை தருகிறேன் என நேற்று சொன்னதற்கு 99% பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த 1% அன்புமணியின் குடும்பத்திற்காக விட்டுவிடுகிறேன்.

நான் பிரச்சாரத்திற்கு போனால் 200 பேர் தான் கூட வேண்டும் என்று சொல்லும் அன்புமணி. என்னை மார்பிலும் முதுகிலும் குத்துகின்றனர். கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதால் சுகாதாரத் துறை அமைச்சர் பதவி அன்புமணிக்கு வழங்கப்பட்டது. அன்புமணியிடம் பேசி சமாதானம் செய்து மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க வைத்தேன்.

2026 தேர்தலுக்கு பிறகு பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன்.  தந்தை, தாயை மதிக்கணும் எனச் சொன்னாலே அன்புமணிக்கு கோவம் வருகிறது. பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அவர்களை கொண்டாட வேண்டும்.

என் குடும்பத்தை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என கட்சி ஆரம்பிக்கும் போது கூறினேன், அதனை காப்பாற்ற முடியவில்லை. அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, மனஉளைச்சலை உண்டாக்குகிறார். தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வராத அளவுக்கு படுத்துகிறார் அன்புமணி. நான் 100 ஆண்டுகள் வரை உயிருடன் இருப்பேன், 100% பாமகவினர் என் பக்கம் தான்" என்று கூறியிருக்கிறார்.