உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!
Author
gowtham
Date Published

சென்னை :தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07, 2025) தொடங்குகிறது. இந்தப் பணியின் கீழ், சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கப்படும். இந்தப் பணி மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும். இத்திட்டத்தின் முதல் முகாம் ஜூலை 15, 2025 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்படும். இந்த முகாம்கள் ஜூலை 15 முதல் நவம்பர் வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். மக்களுக்கு அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே கொண்டு செல்வது இத்திட்டத்தின் நோக்கமாகும். முகாம்களில் பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள், சேவைகள், தகுதி விவரங்கள், தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில்(ரூ.1000) விடுபட்டவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்காக 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற முகாம் வரும் 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று கொடுக்கும் பணிகள் இன்று (ஜூலை 7) முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் சமர்ப்பிக்கலாம்.