Payload Logo
தமிழ்நாடு

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

Author

bala

Date Published

tvk vijay madurai

சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியமான தேர்தல் வியூகங்கள் மற்றும் விஜயின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவலை போலவே, இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, த.வெ.க. தலைவர் விஜய், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறைந்தபட்சம் ஒருவரை கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்கை அறிவித்துள்ளார்.  இது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கான முக்கிய முடிவாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கு முன்னதாக, 2024 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, இந்த முடிவு அதை மேலும் வலுப்படுத்துகிறது. அதைப்போல, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஆகஸ்ட் மாதம் 3-வது வாரத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, மற்றொரு மாநில மாநாட்டை நடத்துவதற்கும் இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல, தமிழகத்தின் 10,000 கிராமங்களில் கட்சியின் கொள்கைகளை விளக்குவதற்காக சிறப்பு கூட்டங்கள் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்கள் மூலம் 50-60 லட்சம் வாக்காளர்களை அணுகி, த.வெ.க.வின் முக்கிய கொள்கைகளான சமத்துவம், மதச்சார்பின்மை, சமூக நீதி, மற்றும் ஜனநாயக உரிமைகளை பரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் மாநில மாநாடு எப்போது நடைபெறும்? மற்றும் விஜய் எந்த தேதியிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்கிற தகவலும் விவரமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.