Payload Logo
தமிழ்நாடு

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது - அன்பில் மகேஸ் பேச்சு!

Author

bala

Date Published

annamalai and anbil mahesh

சென்னை :கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியது சற்று பரபரப்பை கிளப்பியுள்ளது. விழாவில் பேசிய அவர் " பள்ளிகளுக்கு செல்லக் கூடிய குழந்தைகள் கூட நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து செல்ல வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் பதில் அளிக்கும் விதமாக பேசி வருகிறார்கள். அந்த வகையில், அவருடைய கருத்துக்கு பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் " பள்ளிக்கூடம் என்பது அனைவருக்குமே பொதுவாக இருக்கவேண்டும். அந்த காரணத்துக்காக தான் காமராஜர் பள்ளிகளில் சீருடை என்பதை கொண்டுவந்தார். அதனை புரிந்துகொள்ளாமல் பள்ளிகளுக்கு இந்து மதம் அடையாளத்துடன் செல்லவேண்டும் என்பது சொல்வது மிகவும் தவறு.

என்னைப்பொறுத்தவரையில், அண்ணாமலை கருத்து பிற்போக்குத்தனமானது. பள்ளிக்கூடத்தில் இப்படி செல்லவேண்டும் என்பதை அவர் பேசியிருப்பதை பிற்போக்குத்தனமாக தான் நான் பார்க்கிறேன் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை" என அன்பில் மகேஷ் பதில் அளித்தார். மேலும் அதனைத்தொடர்ந்து தமிழ் மொழியில் தொடர்ந்து பாரபட்சம் பார்க்கப்படுகிறது எனவும் பேசினார். இது குறித்து பேசிய அவர் " 5 மொழிகளை காட்டிலும் அவர்கள் ஒருத்தங்களுக்கு மட்டும் எவ்வளவு கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்? குறைந்த பட்சமே பேசக்கூடிய சம்ஸ்கிருதம் கிட்டத்தட்ட 24,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேசக்கூடிய சமஸ்கிருதத்திற்கு பல கோடிகள் ஒதுக்கியுள்ளது.

அதே சமயம் தமிழ்நாடு என்று வரும்போது கிட்டத்தட்ட 8 கோடி மக்களை பெற்றிருக்கோம் என்கிறோம் உலகம் சார்ந்து ஆனால், நமக்கு எந்த அளவுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்? இந்த பாரபட்சம் என்பது இந்த மொழியில் தொடர்ந்து அவர்கள் காட்டக்கூடியதாக தான் நான் பார்க்கிறேன்" எனவும் அன்பில் மகேஷ் பேசினார்.  மேலும், பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு ரூ.2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. இதனை குறிப்பிட்டு தான் அன்பில் மகேஷ் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.