Payload Logo
உலகம்

போரில் இறங்கிய அமெரிக்கா "ஈரான் மீது தாக்குதல்"! மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

Author

bala

Date Published

israel iran war us

இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி போரில் நேரடியாக இறங்கியுள்ளது. ஜூன் 22-ஆம் தேதி ஈரானின் முக்கிய அணு உலைத் தளங்களான ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் மீது அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து தாக்குதல்களை நடத்தின.

இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழிப்பதற்காக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியதைக் குறிக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் தாக்குதல்களை “மாபெரும் இராணுவ வெற்றி” என்று வர்ணித்து, ஈரானின் அணு ஆயுத உற்பத்தி திறனை “முற்றிலுமாக அழித்துவிட்டதாக” அறிவித்தார்.

டிரம்ப், தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில், “ஃபோர்டோ, நடன்ஸ், இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு உலைத் தளங்களில் அமெரிக்கா மிகவும் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியது. அனைத்து விமானங்களும் ஈரான் வான்பரப்பை விட்டு பாதுகாப்பாக வெளியேறி வீடு திரும்பியுள்ளன. ஃபோர்டோ மீது முழு அளவு குண்டுகள் வீசப்பட்டன,” என்று பதிவிட்டார்.

மேலும், அவர் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, “ஈரான், மத்திய கிழக்கின் மிரட்டல் சக்தியாக இருந்து வந்தது, இப்போது அமைதியை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், எஞ்சிய இலக்குகளை மிகவும் துல்லியமாகவும், வேகமாகவும், திறமையாகவும் அழிப்போம். அவை இன்னும் மோசமானதாக இருக்கும்,” என்று எச்சரித்தார். இந்தத் தாக்குதலில் ஆறு B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் மூலம் 30,000 பவுண்ட் எடையுள்ள GBU-57 மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர் (பங்கர் பஸ்டர்) குண்டுகள் ஃபோர்டோ மீது வீசப்பட்டன, மேலும் 30 டோமஹாக் ஏவுகணைகள் நடன்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் மீது கடற்படையால் வீசப்பட்டன.

இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா எடுத்த “தைரியமான முடிவு” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டினார். “இந்தத் தாக்குதல்கள் வரலாற்றை மாற்றும். உலகில் வேறு எந்த நாட்டாலும் இதைச் செய்ய முடியாது,” என்று நெதன்யாகு தனது வீடியோ உரையில் கூறினார்.

ஏற்கனவே நிலைமை மிகவும் மோசமாகி இருந்த நிலையில் இப்போது அமெரிக்காவும் நேரடியாக போரில் இறங்கியுள்ள காரணத்தால் இன்னும் பதற்றமான சூழ்நிலை அங்கு அதிகரித்துள்ளது.  எனவே, அரசியல் ஆய்வாளர்கள், ஈரானின் நெருங்கிய கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் சீனா இந்த மோதலில் தலையிட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரான், பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பதால், ரஷ்யாவின் ஆதரவு இந்த மோதலை உலகளவில் பரவலாக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஒருவர், “இந்தத் தாக்குதல்கள் உலகப் பொருளாதாரத்தையும், எரிசக்தி வழங்கலையும் கடுமையாகப் பாதிக்கலாம். மத்திய கிழக்கில் நிலைமை கட்டுப்பாட்டை இழந்தால், அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்,” என்று எச்சரித்தார்.