Payload Logo
உலகம்

போரில் இறங்கிய அமெரிக்கா! "பெரும் அழிவு காத்திருக்கு"...ஈரான் எச்சரிக்கை!

Author

bala

Date Published

Ali Khamenei trump

தெஹ்ரான் :இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை நேரடியாக போரில் இறங்காமல் இருந்த அமெரிக்கா இன்று திடீரென நேரடியாகவே போரில் இறங்கியது. இன்று ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது முதல் முறையாக நேரடி தாக்குதல் நடத்தியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, “அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது,” என்று எச்சரித்தார். இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியதைக் குறிக்கிறது. ஏற்கனவே, போரில் அமெரிக்காவும் களமிறங்கியுள்ள நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், காமெனியின் இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஈரானின் பதிலடி அச்சுறுத்தலாக, காமெனியின் பிரதிநிதியும், இஸ்லாமிய புரட்சிப் படையின் (IRGC) மூத்த தளபதியுமான ஹொசைன் சலாமி, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார். “தாமதமின்றி, உடனடியாக தாக்குதல் நடத்துவதற்கு இதுவே சரியான தருணம்,” என்று அவர் தெஹ்ரானில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கூறினார்.

பஹ்ரைனில் உள்ள இந்த தளம், பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் முக்கிய இராணுவ மையமாக உள்ளது. எனவே, இந்த இடத்தை குறி வைத்து தான் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது மீதான தாக்குதல், அமெரிக்காவுடன் நேரடி மோதலுக்கு வழிவகுக்கும். ஈரான், ஏற்கனவே ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூலம் மறைமுக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு பிராந்தியத்தில் புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

ஈரானின் கூட்டாளிகளான ரஷ்யா மற்றும் சீனா, இந்த மோதலில் தலையிட வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஈரான், பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இருப்பதால், ரஷ்யாவின் ஆதரவு இந்த மோதலை உலகளாவிய அளவில் விரிவடையச் செய்யலாம் எனவும் மூன்றாம் உலகப்போருக்கு கூட வழிவகுக்கலாம் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.