திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு..அவசரமாக இறங்கிய ஏர் இந்தியா விமானம்!
Author
bala
Date Published

டெல்லி :ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு பயணித்த ஏர் இந்தியாவின் AI315 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. கோளாறு ஏற்பட்ட இந்த விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் மாடலில் இயக்கப்பட்டது, மற்றும் இதில் 231 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் இருந்தனர். நடுவானில் பறக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை தெரிந்தவுடன், விமானி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை ஹாங்காங்கிற்கு திருப்பி வந்து தரையிறக்கினார்.
ஏற்கனவே, இதைபோலவே ஏர் இந்தியா விமானம் ஒன்று சமிபத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 274க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவமே இன்னும் தீராத ஒரு சோகமாக இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு பயணித்த ஏர் இந்தியாவின் AI315 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று கீழே இறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் போது, விமானி விமானக் கட்டுப்பாட்டு மையத்திற்கு ஒரு ‘பான்-பான்’ அவசரச் செய்தியை அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-இது ஒரு அவசர சூழலை குறிக்கும் ஒரு செய்கையாக கூறப்படுகிறது. இந்த அலர்ட் கொடுக்கப்பட்டு விமான நிலையத்தில் முழு அவசரகால நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கிய பின்னர், விமானத்தின் வலது இன்ஜின் மீது பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர், மற்றும் பயணிகள் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். அதன்பிறகு, ஏர் இந்தியா, பயணிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானத்தை ஏற்பாடு செய்தது, அது மட்டுமின்றி, சில பயணிகளுக்கு ஹாங்காங்கில் தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டன.
மேலும், விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முழு ஆய்வு நடத்தப்படும் என்றும் விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எனவே, விசாரணை முடிந்த பிறகு என்ன காரணம் என்பது தெளிவாக தெரிய வரும்.