Payload Logo
இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

Author

bala

Date Published

ahmedabad plane crash news

அகமதாபாத் :நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லண்டனுக்கு செல்லவிருந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்படுத்த சில நிமிடங்களில் பி.ஜே. மெடிக்கல் கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் 241 பயணிகள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்.

இந்த பயங்கர விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து, மீட்புப் பணிகளின்போது 70 தோலா (சுமார் 700 கிராம்) தங்க நகைகள், ரூ.80,000 பணம், பல பாஸ்போர்ட்டுகள் மற்றும் ஒரு பகவத் கீதை நூல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணிகளில் முதல் பதிலளிப்பவர்களாக (First Responders) பங்கேற்ற காந்திநகர் தொழிலதிபர் ராஜு படேல் மற்றும் அவரது குழுவினர், இந்த பொருட்களை இடிபாடுகளில் இருந்து மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

“விபத்து நடந்த முதல் 15-20 நிமிடங்களில் இடிபாடுகளை அணுக முடியவில்லை. எங்களிடம் மீட்பு உபகரணங்கள் இல்லை என்றாலும், பயணிகளின் உயிரைக் காப்பாற்ற புடவைகள் மற்றும் துணிகளைப் பயன்படுத்தினோம்,” என்று ராஜு படேல் தெரிவித்தார். மீட்கப்பட்ட பொருட்களை காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும், இவை உரியவர்களின் குடும்பங்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என்று குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி உறுதியளித்தார்.

விபத்து இடத்தில் மீட்கப்பட்ட பகவத் கீதை நூல், தீவிர தீயிலும் கிட்டத்தட்ட பாதிப்பு இல்லாமல் இருந்தது பலரை ஆச்சரியப்படுத்தியது. இந்த நூலின் அட்டைப் பகுதியில் சிறு சேதம் ஏற்பட்டிருந்தாலும், உள்ளே உள்ள பக்கங்கள் மற்றும் படங்கள் தெளிவாகவே இருந்தன. “ஒரு பயணியின் உடைமையாக இருக்கலாம், யாரோ ஒருவர் இதைப் படித்திருக்கக் கூடும். 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கூட இந்த நூல் பாதிக்கப்படவில்லை,” என்று மீட்பு பணியில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விபத்து குறித்து இந்திய விமான விபத்து விசாரணை ஆணையம் (AAIB) மற்றும் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் காக்பிட் குரல் பதிவு கருவி மீட்கப்பட்டு, விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.