அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!
Author
bala
Date Published

அகமதாபாத் :ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்தில், பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தப் பயங்கர விபத்தில் 241 பயணிகள் உட்பட 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து இந்திய விமான விபத்து விசாரணை பணியகம் (AAIB) தலைமையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB), பிரிட்டன் மற்றும் போயிங் நிறுவன அதிகாரிகள் இந்த விசாரணையில் தொழில்நுட்ப உதவி அளிக்கின்றனர். விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்து, விபத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஏர் இந்தியா நிறுவனத்தின் மூன்று மூத்த அதிகாரிகளை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்க உத்தரவிட்டுள்ளது.
விமானி அட்டவணை மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானிகளின் பணி நேரம் மற்றும் ஓய்வு குறித்த விதிகளை மீறியதாகக் கூறப்படும் மூத்த அதிகாரிகள் மீது, முன்னதாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது, DGCA-யின் இந்த உத்தரவு, விமான பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
இந்த நடவடிக்கைகள் விமானப் பயணத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து விசாரணையின் இறுதி அறிக்கை வெளியான பின், மேலும் தெளிவான தகவல்கள் கிடைக்கும். இதற்கிடையில், ஏர் இந்தியா நிறுவனம் தனது உள் நடைமுறைகளை மறு ஆய்வு செய்து, பாதுகாப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.