தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!
Author
gowtham
Date Published

டெல்லி :தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று தற்காலிகமாக முடக்கியது . சில நாட்களுக்கு முன்பு, ரன்யா ராவ் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.213 கிலோ மறைத்து வைக்கப்பட்ட 24 காரட் தங்கத்துடன் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2.67 கோடி ரொக்கமும், ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், ராவ், தனது கூட்டாளி தருண் கொண்டூரு ராஜு மற்றும் பிறருடன் இணைந்து, துபாய், உகாண்டா மற்றும் பிற இடங்களில் உள்ள சப்ளையர்களிடமிருந்து தங்கத்தை கடத்தும் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில், ஹவாலா மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி துபாய் வழியாக தங்கம் கடத்தும் கும்பலின் ஒரு பகுதியாக அவர் இருந்ததும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் தும்கூர் மாவட்டங்களில் அமைந்துள்ள பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் கீழ், இவை அனைத்தும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.