போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல்.!
Author
gowtham
Date Published

சென்னை :போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும் ஜெஸ்வீர் என்ற கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு கடந்த மே 22ம் தேதி அன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கியது. இந்த சம்பவம் சென்னை காவல்துறையின் கவனத்தை ஈர்த்தது, மேலும் இதனைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் முதலில் முன்னாள் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியான பிரசாத் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டனர்.
பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாகக் கூறப்படும் பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் மற்றும் பிறர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். ஸ்ரீகாந்த் மற்றும் பிற கைதானவர்களுடனான செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ததில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
கடந்த ஜூன் 25ம் தேதி அன்று, கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் 14 முதல் 17 மணி நேரம் வரை விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது, கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தவில்லை எனக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பின்னர், சென்னை பெசன்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவின் வீட்டில் நேற்று காலை இரண்டு மணி நேரம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
மேலும், அவரது சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் வாட்ஸ்ஆப் உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டன. கிருஷ்ணாவின் வாட்ஸ்ஆப் உரையாடல்களில் "கோட் வார்த்தை" (Code Word) மூலம் போதைப்பொருள் தொடர்பான தகவல் பரிமாற்றம் நடந்ததாகக் கண்டறியப்பட்டது. இது விசாரணையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. விசாரணைக்குப் பிறகு, கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும் கெவின் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் பிற்பகல் இருவரும் கைது செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிருஷ்ணா மற்றும் கெவினுக்கு, ஜூலை 10, 2025 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கிருஷ்ணாவுக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கப்பட்டுள்ளது.